‘எழுக தமிழ்’ நிகழ்வினூடாக ஓர் கட்சியின் எழுச்சி முன்னிறுத்தப்படவுள்ளது என பலர் எண்ணுவது முற்றிலும் பிழையான விடையம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணிக்கு சமூக அமைப்புக்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கைகளில், சனிக்கிழமை மீனவ அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில்,
“எழுக தமிழ் என்பது எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ய வேண்டியதே எமது நோக்கமாகும்.
கட்சி பேதங்களை மறந்து தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
அடுத்த மாதம் ஜெனீவாவில் தமிழ் மக்களின் விடயங்கள் பேசப்படப் போகின்றன. அதேநேரத்தில் இலங்கையில் அடுத்தடுத்து மூன்று தேர்தல்கள் வரவிருக்கின்றன.
இந்த நிலையில் எமது பிரச்சினைகளை உலகறிய தமிழ் மக்கள் ஒருமித்து நின்று கூறவேண்டிய தேவை உள்ளது.
நாம் தனிப்பட்ட கட்சி ரீதியான காரணங்களுக்காக இவ்வாறான தமிழ் மக்கள் பேரவையினுடைய எழுச்சி நிகழ்வை காட்டவிருப்பதாக சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால் அவ்வாறு நாம் செயற்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களின் வருங்கால சிந்தனையை உலகறியச் செய்வதே நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.