வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!

0
780

பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் கலாநிதி சிவரூபன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றார்.

மேற்படி வைத்தியர் சிவரூபன் அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. வைத்தியர் சிவரூபன் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியில் அரச படைகளின் துன்புறுத்தல்களினால் ஏற்பட்ட பதிப்புக்களை மூடிமறைப்பதற்கு இடமளிக்காது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்டிருந்தார். பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர் வைத்தியசாலையில் பொது மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்துடனும், பிரதேச மக்களுடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றியவர். அவர்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்திருப்பதானது அவரைப் பழிவாங்கும் நோக்கம் கொண்ட செயலாகும். இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமானது உலகிலுள்ள மிகக் கொடிய சட்டங்களில் ஒன்றாக உள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அச்சட்டத்தை நீக்க வேண்டுமென 2015ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியிருந்தது. இலங்கை அரசும் அதற்கு இணங்கியிருந்தது. எனினும் இன்று வரை அச்சட்டம் நீக்கப்படவில்லை என்பதுடன் அதன் கீழ் கைதுகளும் சித்திரவதைகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டுமென நாம் வலியுறுத்துவதுடன் வைத்திய கலாநிதி சிவரூபன் அவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

செ.கஜேந்திரன் பொதுச் செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here