தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதும் கோட்டாவுக்கு கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என மேலும் தெரிவித்தார்.