பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், செஞ்சோலை நினைவுத்தூபி, நேற்றுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
14.08.2006 அன்று சிறிலங்கா விமானப்படை குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட, பாடசாலை மாணவர்கள் மற்றும் செஞ்சோலை வளாகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, நேற்று தமிழர் தாயகப்பகுதி மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திற்கு செல்கின்ற வீதியின் ஆரம்பத்திலே அமைக்கப்பட்டிருந்த, செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி, பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நினைவுத்தூபியை, உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உள்ளிட்டவர்கள் இணைந்து, திரை நீக்கம் செய்து வைத்ததுடன், நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
நினைவுத் தூபி வேலைகளை மேற்கொண்டு வந்தவர்களை, புதுக்குடியிருப்பு பொலிசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த இடத்தில் படங்கள் பதிக்கவோ, அவர்களுடைய பெயர்களை எழுதவோ தடைவிதித்திருந்ததுடன், நினைவுத்தூபியை மட்டும் அமைக்கலாம் என்பதையும் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், நினைவு தூபியிலே நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க முடியாவிட்டாலும், மாணவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, செஞ்சோலை வளாக வீதி என எழுதப்பட்டு, அழகான முறையில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.