இலங்கையில் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஊடறுத்து வீசிய மழையுடனான பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்றினால் மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர தம்புள்ளையில் 28 வீடுகளும் நாரஹேன்பிட்டி ஹத்போதியவத்த பகுதியில் சுமார் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மேல், மத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.