யாழ் மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (06) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.
குறிப்பாக நல்லூர் மகோற்சவ திருவிழாவினை முன்னிட்டு மக்களின் நலன்கருதி சுத்தமான உணவுகள் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில் காணப்பட்ட தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.
மேலும் ,சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட உணவகங்களுக்கு மிக தகுதிவாய்ந்த உணவகங்களாக மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் பொதுசுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டதுடன் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஆளுநரின் தனிப்பட்ட செயலணி உறுப்பினர்கள் 21 பேர், ஒவ்வொரு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டதுடன் எட்டு பிரிவாக 51 பொதுச்சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டனர்.