பிரான்சில் வாழும் ஈழத்தமிழர்கள், தமது நிலைப்பாட்டையும், தமக்கிழைக்கப்பட்ட உயிர் பறிப்புகளையும், தொடர்ந்துகொண்டேயிருக்கும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளையும் சர்வதேசத்தின் முன்வைத்து தமது மேதினப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஏற்பாடுசெய்திருந்த இந்த மேதினப்பேரணி ஆனது, ஏனைய வெளிநாட்டவர்களுடன் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பேரணி பாரிஸ் Republique பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.
பேரணி சென்ற பிரதான சாலையின் ஒரு பகுதியில் தமிழின உணர்வாளரினால், 21 ஆம் நூற்றாண்டின் முதலாவது தமிழின அழிப்புச் சாட்சியங்களின் நிழல் படங்கள் நான்காவது தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல வெளிநாட்டவர்களும் இதனைப் பார்வையிட்டுச்சென்றதைக் காணமுடிந்தது. துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்தன.
மழைக்கு மத்தியில் பேரணி பாரிஸின் பிரதான சாலை வழியாகத் தொடர்ந்து Nation சுற்றுவட்டம் பகுதியைச் மாலை 6 மணியளவில் சென்றடைந்தது.
பிரான்சு இளையோர் அமைப்பினர், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினர், தமிழீழமக்கள் பேரவையினர் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன் எமது தமிழ்மக்களின் நிலையை வெளிநாட்டவர்களுக்கு பிரெஞ்சு மொழியில் தெரியப்படுத்தியமையைக் காணமுடிந்தது.
பேரணியின் நிறைவில், இளையோர் அமைப்பு உறுப்பினர் பிரெஞ்சு மொழியில் எமது தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆசிரியர் சத்தியதாசன் அவர்களின் உரை இடம்பெற்றது.
அவர் தனது உரையில், கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், எமது நியாயங்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அத்துடன் வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 6 ஆம் ஆண்டு நினைவுப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டு எமது மக்களின் நிலையை வெளி உலகிற்கு உணர்த்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் ஒலித்ததும் அனைவரும் கைகளைத் தட்டி பாடலோடு ஒன்றித்திருந்தனர். இது வெளிநாட்டவர்களைக் கவர்ந்திருந்தது.
நிறைவில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள், பிரான்சு பாரிசில் நாளை சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடை பெறவுள்ள ‘மாற்றத்தின் குரல்” தமிழ்த் தேசியத்தின் எதிர்கால இருப்பிற்கான சமகால அரசியல் கலந்துரையாடலில் ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் பேரணி நிறைவுபெற்றது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு .