பறக்கும் பலகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராங்கி ஜபதாவின் கனவு, சாகச கனவு. அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும் இங்கிலிஷ் கால்வாயை பலரும் நீந்தி சாதனை படைக்க விரும்புவர்.
இன்னும் சிலரோ தங்களுக்கே உரித்தான புதுமையான முறையில் ஹோவர் போர்டு, ஹாட் பலூன், பாராசூட், கிளைடர் என ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஆங்கிலக் கால்வாயை கடந்து சாதிக்க விரும்புகிறார்கள்.
நமது தமிழக வீரர் குற்றாலீஸ்வரன் 1994-ம் ஆண்டு, தனது 13 வயதில் ஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்து இருக்கிறார். அவரது சாதனைக்கு இது வெள்ளி விழா ஆண்டு.
இந்த தருணத்தில், 40 வயதான பிரெஞ்சு வீரர் பிராங்கி ஜபதாவுக்கு ‘ஹோவர் போர்டு’ மூலம் இங்கிலிஷ் கால்வாயை கடக்க வேண்டும் என்பது கனவு. ‘ஹோவர் போர்டு’ என்பது தனிப்பட்ட பயணத்துக்காக உருவாக்கிக்கொள்கிற ஒரு வாகனம். எளிமையாக சொன்னால் பறக்கும் பலகை என்று சொல்லி விடலாம்.
ஜெட் மோட்டார் மூலம் இயங்கும் ஹோவர்போர்டை பல்லாண்டு காலம் முயற்சி செய்து பிராங்கி ஜபதா உருவாக்கினார்.
நேற்று அதிகாலை இவர் வடக்கு பிரான்சில் உள்ள சங்கத்தேவில் இருந்து தனது ஹோவர் போர்டில் புறப்பட்டார். 35 கி.மீ. தொலைவை 20 நிமிடங்களில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் தண்ணீருக்கு மேலே 15-20 மீட்டர் உயரத்தில் பயணித்து கடக்க வேண்டும் என்பது திட்டம்.
இதன்படி அவர் தனது சாகச பயணத்தை தொடங்கியபோது, 3 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து கண்காணித்து வந்தன.
திட்டமிட்டபடி சரியாக 20 நிமிடங்களில் அவர் இங்கிலிஷ் கால்வாயை கடந்து டோவர் அருகே செயின்ட் மார்கரெட்ஸ் விரிகுடாவில் தரை இறங்கினார். அங்கே அவர் வந்திறங்குவதை காண்பதற்கு கூடி இருந்த பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அவரை கை தட்டி வரவேற்றனர்.
இதன்மூலம் பிராங்கி ஜபதாவின் கனவு நிறைவேறியது. இது குறித்து அவர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஒரு சிறப்பான இடத்தில் நான் தரை இறங்க விரும்பினேன். இது அழகானது. எனது குடும்பம், எனக்கு பின்னே இருக்கிறது. அது மிகப்பெரியது. என் மனைவிக்கு மிகப்பெரிய நன்றி. அவர் எப்போதுமே இப்படிப்பட்ட வினோதமான திட்டங்களில் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம்’’ என கூறினார்.
அதுமட்டுமின்றி, ‘‘வலியைப்பற்றி சிந்திக்காமல் மகிழ்ச்சியைப் பற்றி சிந்தித்துத்தான் இந்த முயற்சியில் நான் ஈடுபட்டேன். எனது தொடைகள் வலியால் தகிக்கின்றன’’ என்றும் குறிப்பிட்டார்.
வாழ்வில், சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் மனதில் தீப்பொறியாய் கனன்று விட்டால் வலிகள் பெரிதுபடுத்துவதில்லை. வெற்றி தரும் மகிழ்ச்சியே முக்கியமாகி விடுகிறது.
அதற்கு பிராங்கி ஜபதா ஒரு உதாரணமாக திகழ்கிறார்.