சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச் சென்ற ஆளற்ற ரஷ்யாவின் விண்கலம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அது பூமியில் விழும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கஸகஸ்தானில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் பயணித்த விரைவிலேயே தொடர்பை இழந்துள்ளது. ப்ரோக்ரஸ் என்ற இந்த சரக்குக் கலன் இப்போது மூன்று தொன்கள் எடையுள்ள உணவு மற்றும் கருவிகளுடன் கட்டுப்பாடற்ற வகையில் விண்ணில் சுழன்று சுற்றிக் கொண்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கான பொருட்களை கொண்டு சென்ற இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்தை எட்டும்போது பல துண்டுகளாக உடைந்துவிடும்.
விண்கலம் தொடர்பை இழந்த போதும் அது பூமியின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
“விண்கலம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அது சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைகொள்வது சாத்தியமற்றது” என்று ரஷ்ய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் இகோர் கமரோவ் குறிப்பிட்டார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓர் ஆண்டுகாலமாக இருக்கும் விண்வெளி வீரர்களான மிகைல் கொர்னைன்கோ மற்றும் ஸ்கொட் கெல்லி ஆகியோர் ஏ.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், குறித்த விண்கலத்தின் கட்டுப்பாட்டளார்கள் விண்கலத்தை மீண்டும் கட்டுப்படுத்தும் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.