தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் ஆறு இடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டு வெடிப்புகளில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலிரண்டு தாக்குதல்களும் மத்திய பேங்கொக்கில் இன்று காலை 9 மணியளவில் நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது தாக்குதல் அமைச்சர்கள் பலர் ஒன்று கூடியிருந்த அரச கட்டடம் ஒன்றை இலக்கு வைத்த நடத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய தாக்குதல்கள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்ததாக்குதல்களில் இதுவரை அறுவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பேங்கொக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓசா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உடனடி மருத்துவ வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார்.
இந்ததாக்குதல்களுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அந்நாட்டு படையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பேங்கொக்கில் தற்சமயம் தென்கிழக்காசிய பிராந்திய பாதுகாப்புசார் மாநாடு நடைபெறுவதுடன் அதில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட பல நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.