நாவற்குழியில் 24 இளைஞர்கள் கைதுசெய்து காணாமலாக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

0
186

நாவற்குழி இராணுவ முகாமில் 1996 ஆம் ஆண்டு 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்யும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இதனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியதில்லை என வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனுதாரர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்படவில்லை எனவும், நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் எதுவித கட்டளைகளும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்ட சாவகச்சேரி நீதவான் து.கஜநிதிபாலன், வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் காணாமலாக்கப்பட்டதாகத் தெரிவித்து மூன்று இளைஞர்களின் பெற்றோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here