தமிழர் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் சிறிலங்கா இனப்படுகொலை இராணுவம் முனைப்பாக செயற்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியான கிளிநொச்சியில் சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினால் சிங்கள தற்காப்புக் கலை கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த வாரம் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌத்த பிக்குவின் ஆசீர்வாதத்துடன் இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தின் அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவ வலைத்தளத்தின்படி இந்தக் கிராமம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ வீரர்கள் அங்கம்போராவின் சிங்கள தற்காப்புக் கலையைப் பயிலும் பயிற்சி மையமாக செயற்படும் எனவும் இந்த அங்கம்பொர தற்பாதுகாப்பு கலைப் பயிற்சிகள் கையில் வாள், போர்க் கோடரிகள், தடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்கி மேற்கொள்ளப்படுவதாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நிஷ்சங்க ரணவன கட்டளைத் தளபதிகள், படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் படையினர் மற்றும் முக்கிய அதிதிகள் கலந்துகொண்டதாக இராணுவ இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தற்காப்புக் கலையானது வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களை எதிர்ப்பதற்காக இலங்கைப் படையினரால் பிரத்தியேகமாக நடைமுறையில் இருந்தது என்றும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
இறுதிப் போர் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிலங்கா இனப்படுகொலை இராணுவம் வசம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வளங்கள் நிறைந்த குறித்த பகுதிகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவருடன் இலங்கை இராணுவத்தினரின் இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இவ்வாறான நிலையில் சிங்கள பௌத்த மக்கள் வசிக்காத கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தற்காப்புக் கலைக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளமை நில அபகரிப்பு செயற்பாடு மாத்திரமன்றி வேறு என்னவாக இருக்க முடியும் என சமூக ஆர்வலர் ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார்.