சீனாவில் நீச்சல்குளத்தில் சுனாமி வேகத்தில் எழுந்த பேரலையால் 44 பேர் காயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சீனாவில் உள்ள ஷூயூன் நீர் பூங்காவில் மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளது. அந்த நீச்சல் குளத்தில், செயற்கை அலையை உருவாக்கும் இயந்திரம் உள்ளது. அந்த செயற்கை அலை உருவாக்கும் இயந்திரம், யாரும் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய சுனாமி போன்ற பேரலையை உருவாக்கியுள்ளது. இதனால் 44 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அலை உருவாக்கும் இயந்திரத்தை இயக்கியவர், ஸ்திரமான நிலையில் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து ஷூயூன் நீர் பூங்கா நிர்வாகம், “இயந்திரம் பழுதானதே இந்த அசம்பாவிதத்துக்குக் காரணம். ஊழியர் மேல் எந்தப் பிழையும் இல்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளது.
நீர் பூங்காவில் சுனாமி போன்ற பேரலை வரும் காட்சி, வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
வீடியோவில், நீச்சல் குளத்தில் மிகவும் நீராடிக் கொண்டிருந்த பலர், குளத்துக்கு வெளியே தூக்கியெறியப்படுவது தெரிகிறது. குறிப்பாக ஒரு பெண் தூக்கியெறியப்பட்ட பின்னர் அவரது மூட்டுகளில் இருந்து இரத்தம் வடிகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாட்டர் பார்க் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.