ஆந்திராவில் போலி என்கவுண்டரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் தர வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழார்வலர்களும், அரசியல் கட்சியினரும் எழுச்சிமிகு பேரணி நடத்தினர்.
கடந்த 7ஆம் தேதி திருப்பதி அருகே ஷேசாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணி கிண்டியில் தொடங்கி கவர்னர் மாளிகை நோக்கி சென்றது. பேரணி முடிவில் ஆளுநர் மாளிகையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் தர வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஆந்திர என்கவுன்டர் பற்றி விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இந்த பேரணியில் பங்கேற்றன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.