பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

0
525

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை 26 ஆவது ஆண்டாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் நேற்று (20.07.2019) சனிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்றிருந்தது.

மைதானத்தின் வாயிலில் அமைந்திருக்கும் தமிழீழ விடுதலை புலிகளில் முதற்களப்பலியான லெப்.சங்கர் ஞாபகார்த்த நினைவுத்தூபிக்கு முன்பாக சுடரினை 09.12.1997 அன்று யாழ். வதிரிப் பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் ஜெயசீலன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மைதானத்தில் மாவீரர் திருவுருவப்படத்திற்கான ஈகைச் சுடரினை 02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்.காண்டீபன் அவர்களின் சகோதரி ஏற்றி வைக்க மலர் வணக்கத்தை 17.06.1998 அன்று கரிப்பட்டமுறிப்பில் வீரச்சாவடைந்த வீரவேங்கை ஒளியவனின் சகோதரி செலுத்தினார்.

அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின. இந்த வருடம் ஒன்பது கழகங்கள் பங்குபற்றுகின்றன. நேற்றை போட்டிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டிருந்தனர். போட்டி நடத்துநர்களும் தொடர்ச்சியாக தகாத காலநிலைகளுக்கு மத்தியிலும் தமது கடமைகளை சிறப்பாக கருத்தோடு ஆற்றிவருவதென்பது பாராட்டத்தக்க விடயம். நேற்றையதினமும் போட்டிகள் தெரிவுப்போட்டிகளாகவும் சில போட்டிகள் இறுதிப்போட்டிகளாகவும் இடம்பெற்றிருந்தன. நேற்று ஓட்டம், குண்டுபோடுதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல், உயரம் பாய்தல் போன்ற போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றன. ஒவ்வொரு போட்டிகளின் முடிவின்போதும் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. தொடர்ந்து மாபெரும் இறுதிப்போட்டிகள் இன்று (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகளைக் கண்டுகளிப்பதற்கு அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here