இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடகின்றாய்..!

0
1110

யதார்த்த உண்மை!

“நாகவிகரையில்
பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று..
இனி என்ன?
“காமினி ரீ றூம்”
கதவுகள் திறக்கும்!
சிற்றி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில்
அறிமுகமாகும்!
புத்தன் கோவிலுக்கு
அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்!
சிங்கள மகாவித்தியாலயம்
திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின்
வெள்ளரசிற் கட்டலாம்,
முனியப்பர் கோவில்
முன்றலிலும் கட்டலாம்,
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில்
மதிலிலும் கட்டலாம்!
எவர் போய் ஏனென்று கேட்பீர்?
முற்ற வெளியில்
“தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில்
களியாட்ட விழாவும் நடைபெறலாம்!
நாகவிகாரையிலிருந்து
நயினாதீவுக்கு
பாதயத்திரை போகும்!
பிரித் ஓதும் சத்தம்
செம்மணி தாண்டிவந்து
காதில் விழும்!
ஆரியகுளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளாத்து பூக்களும்
பூசைக்கு போகும்!
நல்லூர் மணி
துருப்பிடித்துப்போக
நாகவிகாரை மணியசையும்!
ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக்கிடக்க
ஆரியகுளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!
எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்!

-தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here