முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியைத் துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் காலமானார்.
இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் மண்ணை விட்டு மறைந்தமை வேதனையே.
1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர் மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் முல்லைத்தீவின் பங்குத்தந்தையாக பொறுப்பெடுத்தார் .
உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் சிங்கள ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கும் முகம் கொடுத்துக்கொண்டு மீள்குடியேறிய இம்மக்களுக்கு மதம் கடந்து பல்வேறு மனிதாபிமான பணிகளையும் உதவிகளையும் செய்து அம்மக்களின் அன்பை வென்றெடுத்தார்.
2004 இல் முல்லைத்தீவை கொடூரமாகத் தாக்கிய சுனாமியின் போது உயிர் தப்பிய இவர் சுனாமியால் அனைத்தையும் இழந்து போன அம்மக்களிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. மதம் கடந்த இவரின் அன்பு செலுத்தல் அனைத்தும் மக்களையும் இவர்பால் ஈர்த்தது .
2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழர் இன அழிப்பு உக்கிரம் அடைந்த நாட்களில் சிங்கள இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட வலைஞர் மடம் தேவாலயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலில் காயமடைந்து முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் இரத்த சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்தவர் .
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவராலும் தளபதிகளாலும் போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் மறைவுக்கு
நாம் அனைவரும் எமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம்.