ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

0
559


ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
பிரான்சிலிருந்து தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி, பிரான்சு இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் நிந்துலன் ஆகியோரும் சுவிசிலிருந்து சுவிஸ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களான தீபன், சஞ்சயன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பில் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசினாலும் அதன் படையினராலும் தொடர்ந்து நடாத்தப்பட்டுவரும்; மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் குறித்தும் தெளிவாக விளக்கியிருந்தார்கள்.
அத்துடன், ஐ.நா.மனித உரிமைகள் சபை முன் சிறிலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிகளை 4 ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றவில்லை என்றும் இனியும் அதுநிறைவேற்றும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் இதற்கு மாற்று வழிகள் பற்றிச் சிந்திக்க வேண்டும் எனவும் செயற்பாட்டாளர்களினால் வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் சிறிலங்காவில் இடம்பெற்ற பல சம்பவங்களை எடுத்து விளக்கியிருந்தனர். மனித உரிமைச் சட்டங்களையும் மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் கைதுசெய்யப்பட்டமை அங்கு மேலும் வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு, தமிழின அழிப்பு, நில ஆக்கிரமிப்பு, தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், புத்த விகாரை அமைப்பு என பல்வேறுபட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் இது, சிறிலங்கா அரசு மீதான நம்பி;க்கையை சிதைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசை மனித உரிமை அடிப்டையில் நடக்கும்படியான அழுத்தம் கொடுப்பதற்கு மாற்று வழிகளைச் சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்த செயற்பாட்டாளர்கள், பல நாடுகளிலும் வாழ வழியின்றி நாடின்றி அகதிகளாக அல்லற்படும் எம் தமிழ் உறவுகளுக்கு ஒரு விடிவைப் பெற்றுக்கொடுக்குமாறும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியை வலியுறுத்திக்கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தாம் செவிமடுப்பதாகவும் தன்னால் முடிந்தளவிற்கு மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முயல்வதாகவும் செயற்பாட்டாளர்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here