வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து கொள்கை வழி கூட்டமைப்பை உருவாக்கி இதய சுத்தியுடன் செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் தெரிவித்துள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கிலான கொள்கையில் பயணிக்கும் கூட்டணியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் சேர்ந்து எதிர்காலத்தில் பயணிப்பது சாத்தியமாகாது எனவும், அந்தக் கட்சியின் கொள்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தடையாக இருக்கும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு தமிழ் மக்களுக்கு தவறிழைத்துள்ளதாகவும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றவர்கள், சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடும் தரப்புக்களை உள்வாங்கி ஓர் கொள்கை வழிசார் உறுதியான கூட்டு ஒன்றை உருவாக்கலாம் என்று எண்ணுவது தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் நலனுக்காக மாத்திரம் செயற்படுவதாக தமிழ் மக்களால் கருதப்படும் EPRLF கட்சி இன்றி அரசியலில் கூட்டு இல்லை என்ற நிலைப்பாட்டை சி.வி.விக்னேஸ்வரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளை முற்றாக நிராகரித்து, பதவி ஆசைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறுதியான அரசியல் பேரியக்கம் ஒன்றை தம்முடன் இணைந்து உருவாக்க சி.வி. விக்னேஸ்வரன் முன்வர வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.