தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு 9 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சொந்த நிலங்களில் விரைவில் மீளக் குடியமர வேண்டும் என்று வேண்டி தீபங்கள் ஏற்றி விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர் சம்பூர் மக்கள்.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அப்போது இராணுவ தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா மீது விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.
அதன் எதிரொலியாக அன்றிரவு கிழக்கு மகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தில் கடும் விமான தாக்குதல்கள் இடம் பெற்றிருந்தன. அதனால் மறுநாள் சம்பூர் பிரதேச மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது போர் முடிந்து 6 ஆண்டுகள் கழிந்துள்ளபோதும், சம்பூர் மக்களின் மீள்குடியமர்வு தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசின் பதவிக் காலத்தில் மக்களின் குடியிருப்பு காணிகளும், வயல் நிலங்களும் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கடற்படை உயர் பாதுகாப்பு பிரதேசம் மற்றும் இந்திய அனல் மின் உற்பத்தி நிலையம் என அடையாளமிடப்பட்டு விசேட வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரிக்கப்பட்டது.
அதனால் தமது சொந்த நிலங்களில் குடியமர முடியாத சம்பூர் மக்கள் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களிலேயே பெரும் சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் புதிய அரசு பதவியேற்ற பின்னர் அந்த மக்களின் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
முதல் தொகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் என அடையாளமிடப்பட்ட 818 ஏக்கர் விடுவிக்கப்பட்டு, மீள்குடியமர்வு நடைபெறும் என்று மீள்குடியேற்ற அமைச்சால் உறுதி வழங்கப்பட்டிருந்தபோதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தப் பின்னணியில் நேற்று சம்பூர் மக்கள் தமது சொந்த நிலங்கள் வேண்டும் என்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அவர்கள் தற்பொழுது தற்காலிகமாக தங்கியுள்ள கிளிவெட்டி , கட்டப்பறிச்சான் உட்பட இடைத்தங்கல் முகாம்களுக்கு முன்பாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரனும் கலந்து கொண்டார்.