நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவின் பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 51 பேர் பலியாகினர். 237 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு டெல்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நேபாளத்துக்கு மிக அருகே அமைந்துள்ள பிகார் மாநிலத்தில் நிலநலடுக்கத்துக்கு 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 133 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதேபோல், நிலநடுக்கத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 பேரும் மேற்கு வங்க மாநிலத்தில் 2 பேரும் பலியாகினர். இந்த இரு மாநிலங்களிலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 104 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் ரிஜிஜு.
இந்நிலையில், மேற்கூறிய மூன்று மாநிலங்களிலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் 5 பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறைச் செயலர் எல்.சி. கோயல் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த ஒவ்வொரு குழுக்களிலும் 45 வீரர்கள் இடம்பெற்றிருப்பர். சுவாசக் கருவிகள், உலோகங்களை அறுக்கும் கருவிகள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றுடன் அந்தக் குழுவினர் சென்றுள்ளனர்.
இதேபோல், நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அஸ்ஸாம், ஒடிஸா, மிúஸாராம், ஆந்திரப் பிரதேசம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றார் எல்.சி.கோயல்.