ஈழத்தில் தமிழினத்தை அழிக்கும் முயற்சி பேரினவாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் அங்கு தமிழனே இருக்கமாட்டான் என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர், விளார் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பழ.நெடுமாறன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதன் ஊடாக நமது கடமை முடிந்து விடாது. ஈழத்தில் மக்கள் இன்னும் அழிவின் விளிம்பிலேயே உள்ளனர். ஆகையால் அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கு உண்டு. அந்தவகையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இன்னும் எந்ததொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறும் அம்மக்களை உலகம் திரும்பி பார்க்க வேண்டுமென்றாால், அனைத்து தமிழர்களும் ஒன்றுக்கூடி செயற்பட்டால் மாத்திரமே முடியும். இலங்கையில் இன அழிப்பு மட்டுமல்ல. அவர்களுடைய பண்பாடு, அடையாளங்களும் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு தமிழினத்தை அழித்து ஒழிக்கும் முயற்சியில் பேரினவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது உலக நாடுகள் வேடிக்கை பார்த்தது. அதனைத் தொடர்ந்து ஈழப்போரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென சர்வதேசம் இன்னும் கூறுகின்றதே ஒழிய, அதற்கு காரணமானவர்களுக்கு இதுவரை தண்டனையை பெற்றுக்கொடுக்கவில்லை. ஆகையால் ஈழத்தில் எஞ்சியுள்ள தழிழ் மக்களையாவது பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்” என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.