தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 38 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தலைமையில் வவுனியா நகரில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பலரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த 38ஆவது சிரார்த்த தின நிகழ்வில், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, யாழ் பொது நூலகத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்திலும் இன்று காலை இவரது நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.
தந்தை செல்வா அறக்கட்டளை குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு அறக்கட்டளை நிலைய தலைவர் வண.பிதா ஜெபநேசன் அடிகளார் தலைமை தாங்கினார்.
இதில், தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையினை தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் லலீசன் ஆற்றியதுடன், சிறப்புரையினை கனடா வாழ் சட்டத்தரணி கனா மனோகரன் ஆற்றினார்.
இந்நினைவுநாள் நிகழ்விற்கு, மத தலைவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா உட்பட தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.