மயூரனுக்கு மரணதண்டனை – இந்தோனேஷியா அறிவிப்பு!

0
146

myuransukumaranமயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் மீதான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படுமென இருவருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எட்டு வெளிநாட்டவர்களுக்கும் இது பற்றிய உத்தியோகபூர்வமான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா அறிவித்துள்ளது.

மயூரன், சான் ஆகியோருடன் பிரேஸில், நைஜீரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளும் மரணதண்டனையை எதிர்கொள்கிறார்கள்.

ஒன்பதாவது குற்றவாளி பிரெஞ்சுப் பிரஜையாவார். பிரான்ஸ் அரசாங்கம் தொடுத்த அழுத்தத்தை அடுத்து அவருக்குத் தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்தோனேஷிய சட்டமா அதிபரின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், ‘இன்று நாம் ஒவ்வொரு குற்றவாளிக்கும் அறிவித்து முடித்து விட்டோம், செர்கேயைத் தவிர ஒன்பது பேர் அறிவித்தலைப் பெற்றுள்ளார்கள்,’ என்றார்.

‘இவர்களின் கடைசி ஆசை என்ன என்பதையும் கேட்டோம்.’

திட்டமிடப்பட்டவாறு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுமென அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்தார். இதற்குரிய உத்தியோகபூர்வ திகதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தோனேஷிய சட்டத்தின் பிரகாரம், உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் 72 மணித்தியாலங்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

மரணதண்டனையை எதிர்கொள்ளும் பிலிப்பைன்ஸ் பெண்மணி மேரி ஜேன் வெலோசோவின் சட்டத்தரணி கருத்து வெளியிடுகையில், இந்தப் பெண் மீதான மரணதண்டனை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்படுமென தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள சகல கைதிகளும் உயர் பாதுகாப்புடன் கூடிய நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

மயூரன், சான் ஆகியோரது குடும்பத்தவர்கள் நுசக்கம்பங்கனுக்கு அருகிலுள்ள சிலாக்கெப் பிரதேசத்திற்கு செல்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இவர்கள் இருவரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஜூலியன் மெக்மோகன், சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் சந்தித்துத் திரும்பினார். அவர் மயூரன் வரைந்த சுய உருவ ஓவியங்களை ஏந்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

இவற்றில் ஏப்ரல் 25 என்று திகதியிடப்பட்ட ஓவியமும் அடங்கியிருந்தது. அதில் ’72 மணித்தியாலங்கள் ஆரம்பமாகியிருக்கின்றன’ என்று எழுதப்பட்டிருந்ததாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் மயூரனையும், சானையும் பாதுகாப்பதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. கன்சியூலர் உத்தியோகத்தர்கள் நுசக்கம்பங்கன் சிறைச்சாலைக்கு சென்றிருக்கிறார்கள்.

பாலி-நைன் ஹெரோயின் போதைப்பொருள் கும்பலின் தலைவர்கள் என்று கூறப்படும் மயூரனும் சானும் பத்து வருடகால சிறைவாழ்க்கை தம்மை திருந்தியவர்களாக மாற்றியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் மரணதண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த சகல மேன்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ கருணை மனுவையும் தள்ளுபடி செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here