தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2019 கடந்த (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை செல் பிராங்கோ தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. திருப்பதி அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை செல் பிரதி நகரபிதா திரு.பிலிப் மோறி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.கிருபா அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச் சுடரினை 1997 இல் பரந்தன் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த மாவீரர் 2 ஆம் லெப். விற்கொடி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, விளையாட்டுவீரர்கள், நடுவர்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து போட்டிகளை பிரதி நகரபிதா பிலிப் மோறி அவர்கள் ஆரம்பித்துவைக்க பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவி போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ் அவர்கள் தொடக்கிவைத்தார் . தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் அணிநடை இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையை செல் பிரதி நகரபிதா பிலிப் மோறி அவர்களும், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவி போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ் அவர்களும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயற்பாட்டாளர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களும், செல் தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி மாலினி பீலீக்ஸ் அவர்களும், செல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.கு.நிமலன்அவர்களும் ஏற்றுக்கொண்டனர். எல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் ஆகிய மூன்று இல்லங்களிடையே மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றன. குறித்த மூன்று இல்லங்களும் தமது இல்லங்களை சிறப்பாக அலங்கரித்திருந்தனர். ஒவ்வொரு இல்லமும் தமது இல்லங்களின் பெயர்களுக்கு ஏற்றதுபோன்று தமது இல்லங்களில் எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் ஆகியோர் குறித்த விடயங்களை அடையாளப்படுத்தியிருந்ததுடன், இல்லப்பரிசோதனைக்கு சென்ற குழுவினரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்ததுடன் எமது தாயகம் சார்ந்த உணவுகளையும் வழங்கி உபசரித்ததுடன், குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சிறப்பாகப் பதில் அளித்திருந்தனர். நின்றுபாய்தல், பந்தெறிதல், நீர்நிரப்புதல், சாக்கோட்டம், கயிறடித்தல், கலப்பஞ்சல், கயிறிழுத்தல், சங்கீதக் கதிரை, இனிப்புச்சேகரித்தல், ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட விளையாட்டுக்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. முதலிடத்தை எல்லாளன் இல்லமும் இரண்டாம் இடத்தை சங்கிலியன் இல்லமும் மூன்றாம் இடத்தை பண்டாரவன்னியன்; இல்லமும் பெற்றுக்கொண்டன. தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பதக்கமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)