யாழ்.நகர பகுதியில் பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்குமாறு கோரி கவன ஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்பட்டுள்ளது. வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் அபகரித்து அதனை தனது கடையுடன் இணைத்துள்ளார்.
இதனால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் யாழ்.மாநகர சபையின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் அது தொடர்பில் எந்தவிதமான சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க நிர்வாகம் தயக்கம் காட்டி வருகின்றது.
சட்டவிரோத அபகரிப்பு தொடர்பில் சகல ஆவணங்களும் இருக்கின்ற நிலையில், மாநகர சபை நிர்வாகம் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க தவறி வருகின்றமை, தற்போதைய மாநகர சபை நிர்வாகத்தின் மீது வலுத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அபகரிக்கப்பட்ட குறித்த வீதி மீண்டும் மக்களுடைய பொது பாவனைக்காக திறந்து விட வேண்டும் என்று கோரியும், அவ்வீதியை அபகரித்தவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் “ஏழைகளுக்கு ஒரு நீதி.. செல்வந்தா்களுக்கு ஒரு நீதியா..?”, “வரைபடங்களிலிருந்து காணாமல்போகும் வீதிகள் எங்கே மாநகரசபையே?”, “முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பில் வீதிகள் கூட தப்பவில்லை..” என கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறும்,கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.