கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 12ஆம் திகதி அன்று தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூஸிலாந்தை நோக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் பயணத்தை தொடங்கியிருந்தனர். பயணத்தை தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் அவர்களின் இருப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள வெளிவிவகாரத்துறை பேச்சாளர் ரவீஷ் குமார்,
“பசிபிக் கடலை நோக்கி இப்படி ஒரு படகு சென்றிருப்பதை கேரள அரசாங்கம் தெரிவித்திருந்தது. குறித்த பகுதியிலுள்ள நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ள போதிலும், எந்த நாட்டிடமிருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், 12நாள் குழந்தை உட்பட 85 குழந்தைகள் அப்படகில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும் பகுதியினர் தெற்கு டில்லியிலுள்ள மதாங்கீர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்களின் நிலைக்குறித்து கண்டறிய படகில் சென்றவர்களின் விபரங்களை உள்துறை, வெளிவிவகாரத்துறை, டில்லி அரசாங்கம், தேசிய மனித உரிமை ஆணையகம் உள்ளிட்ட பலத்தரப்புக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.