பிள்ளைகளைப் பாடசாலைக்குச் சேர்க்க இயலாமல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலைசெய்த பெருந்துயர்!

    0
    237

    கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளந்தாய் ,பிள்ளைகள் இருவரையும் பாடசாலைக்குச் சேர்க்க முடியாத கவலையில் துன்புற்றார் என அவரது தாயார் செல்லையா ரீட்டா மரண விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனை, பரமானந்த மாவத்தையைச் சேர்ந்த ஜெனிட்டா தர்ஷினி இராமையா (வயது 32), அவரது மகன்களான பிரேம்நாத் நோயல் (வயது 12), பிரேம்நாத் டியோன் க்ரிஷ் (வயது – 08) ஆகியோரின் மரண விசாரணைகள், கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி முன்னிலையில் நடைபெற்றன. அதன்போது தற்கொலை செய்த பெண்ணின் தாயார் ரீட்டா மேலும் கூறியுள்ளதாவது:-

    “எனது மூத்த மகளும் அவரது இரண்டு பிள்ளைகளுமே இறந்துள்ளனர்.முதல் குழந்தை 6 மாதமாக இருக்கும்போது மகள் அவரது கணவருடன் வெளிநாடு சென்றார். அங்கு விசா பிரச்சினை ஏற்பட்டதால் இரு பிள்ளைகளுடன் நாடு திரும்பிய மகள் பிள்ளைகளுக்கு பாடசாலை தேடினார்.

    பிள்ளைகள் வெளிநாட்டில் ஆங்கிலம் கற்றதால் இங்கு சாதாரணப் பாடசாலைகளில் சேர்க்க முடியவில்லை. முன்னைய பாடசாலைகளின் விடுப்புப் பத்திரம் இல்லாதபடியால் அவர்களைச் சேர்க்க கஷ்டமாகவும் இருந்தது.

    அதனால் சர்வதேச பாடசாலைகளை விசாரித்தோம். அங்கு பெருமளவு பணம் கேட்கப்பட்டதால் மகள் மிகவும் கவலையில் இருந்தார். நான் பணம் தேடித் தருவதாகக் கூறினேன்.

    கடந்த 13 ஆம் திகதி நாங்கள் பாடசாலை ஒன்றுக்குச் சென்றோம். அங்கு பணம் கேட்டார்கள். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. பின்னர் வீட்டுக்கு வந்த மறுநாள் என்னிடம் “அம்மா இனி உங்களுக்குத் தொல்லையாக இருக்கமாட்டோம்” என்று கூறிய மகள் தேவாலயத்துக்குச் செல்வதாகக் கூறி பிள்ளைகளுடன் சென்றார்.

    14ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டில் இருந்து சென்றார். எனது பேரன்மார் இருவரும் மிகவும் கீழ்ப்படியானவர்கள். அப்பாவிப் பிள்ளைகள். அவர்களுக்கு பாடசாலை கிடைக்கவில்லை என்று மகள் மிகவும் கவலையில் இருந்தார். அந்தக் கவலையில் மகள் இப்படிச் செய்திருக்கக்கூடும்” – என்று தாயார் ரீட்டா கண்ணீருடன் சாட்சியமளித்தார்.

    பிள்ளைகளுடன் தற்கொலை செய்த ஜெனிட்டா தர்ஷினியின் கணவர் டுபாயிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார் எனவும், எனினும், அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவதில்லை னவும் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here