பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியின் 95 ஆவது மாவட்டத்தை கொண்ட தமிழர் விளையாட்டுக்கழகம் 95 தனது இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டி கடந்த 16.06.2019 ஞாயிற்றுக்கிழமை Stade Pierre du Coubertin GARGES LES GONESSE மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு இல்ல வீரர்கள் போட்டி நடுவர்கள், பொதுமக்கள் மத்தியில் தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை போட்டியின் மேலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுத் தேசியக்கொடியினை தமிழர் ஒங்கிணைப்புக்குழு பிரான்சின் நிர்வாக உறுப்பினர் திரு.பாலசுந்தரம் அவர்களும், தமிழீழத்தேசியக் கொடியினை தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளர் திரு. அஞ்சலோ செல்வராஜா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. சுடரினை மாங்குளம் மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற மோதலில் 22.07.1998 இல் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப். கரிகாலனின் சகோதரர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தாயகத்துக்கான நினைவு சுமந்து அதற்கான மதிப்பளித்தலைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் இல்ல விளையாட்டுப்போட்டி வைபவரீதியாக ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக 95 தமிழர் விளையாட்டுக் கழகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு. ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து இல்லக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன பாரதி இல்லக்கொடியை திரு. இ.ஜீவானந்தம் அவர்களும், குருகுலம் இல்லக்கொடியை திரு.சி.மணிவண்ணன் அவர்களும், அன்பு இல்லக்கொடியை திருமதி இ. றஞ்சினி அவர்களும், காந்தி இல்லக்கொடியை திருமதி பா. சுதர்சினி அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. சுடரினை பிரான்சு மெய்வல்லுநர் போட்டிகளின் முகாமையாளர் ஆசிரியர் திரு.இராஜலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்து முதன்மை வீர வீராங்கனையான செல்வன் இ.பகிதரன், செல்வி டீ.துஸ்யந்தி அவர்களின் கைகளில் கையளிக்க மைதானத்தின் நான்கு முனைகளிலும் நின்றிருந்த ஏனைய இல்ல வீரர்களின் கைகளில் ஒப்படைத்து இறுதியில் எல்லோரும் ஒன்று சேர சுடர்கல்லின் மீது சங்கமிக்கப்பட்டது. தொடர்ந்து வீரர்களுக்கான சத்தியப்பிரமாணத்தையும், நடுவர்களாக கடமையில் ஈடுபடவிருந்தவர்கள் தமக்குரிய உறுதிப்பிரமாணத்தையும் செய்திருந்தனர். தொடர்ந்து இல்ல மாணவர்களின் அணிநடை இடம்பெற்றது. அணிநடையின் ஆரம்ப கட்டளையை ஆசிரியர் திரு.க.சேயோன் அவர்கள் வழங்க தொடர்ந்து அணிநடைத் தலைவர்கள் அவற்றைப் பின்பற்றி அணிநடையாகச் சென்றிருந்தனர். இவர்களின் அணிநடை மரியாதையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கிருபா, மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு. இராஜலிங்கம், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, 95 தமிழர் விளையாட்டுக்கழத் தலைவர் திரு.ரமேஸ் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
சிறுவர்கள், பெரியவர்கள் பெண்கள,; ஆண்களுக்கான அனைத்துவயதுக்குமுரியவர்களுக்கான தடகளப்போட்டிகள், குண்டு போடுதல், நீளம் பாய்தல் உயரம் பாய்தல், தட்டெறிதல் இல்லங்களுக்கிடையேயான அஞ்சல் ஓட்டம், குழந்தைகளுக்கான போட்டிகளும் நடைபெற்றன. மாலை 8.00 மணிவரை போட்டிகள் நடைபெற்றன. சிறப்பான வகையில் இப்போட்டிகளை நடாத்தி முடித்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மெய்வல்லுநர் போட்டி முகமையாளருக்கும் நடுவர்களுக்கும் தமிழர் விளையாட்டுக்கழகம் 95 கழகத்தினர் நன்றியைத் தெரிவித்ததோடு, நினைவுப் பரிசில்களையும் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர். காரணம் அன்றைய தினம் செல் பிரதேசத்திலும் இல்லங்களுக்கிடையேயான தெரிவுப்போட்டிகள் மெய்வல்லுநர் போட்டிகளின் துணை முகாமையாளர் திரு. பீலிக்ஸ் அவர்கள் தலைமையில் நடாத்தியிருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற வீரவீராங்கனைகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார். தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கும் அதன் தலைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் கூறியிருந்தார். இந்த போட்டிகளில் தம்முடன் இணைந்து பங்கெடுத்த நடுவர்களையும் பாராட்டியிருந்தார். காரணம் எந்த வித பணமோ பதவியோ பிரதி உபகாரம் பார்க்காமல் தமக்கு அடுத்து வரும் சந்ததியை ஆரோக்கியமான திடகாத்திரமான தேசப்பற்று நிறைந்த சமுதாயமாக உருவாக்கவேண்டும் என்ற ரீதியில் அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றவர்கள் என்றும். இப்படியான களம் அமைத்து மாநகர மட்டத்தில் போட்டிகள் நடாத்தப்பட்டு மாநில ரீதியாகவும் போட்டிகளில் பங்குகொண்டு தமிழ்ச்சோலைப் பணியகத்தால் நடாத்தப்படு;ம் இல்லமெய்வல்லுநர் போட்டிகளிலும், தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகளிலும் அதிகமாக போட்டியாளர்களும் , மக்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும். இனி வருகின்ற நாட்களில் தொடர்ச்சியாக மெய்வல்லுநர் போட்டிகள் பல நடைபெறவுள்ளது என்றும்; எல்லோரும் அவற்றில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த கார்லகோணேஸ் மாநகர உதவிமுதல்வர் அவர்கள் உரையாற்றியதுடன் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங் களையும் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தார். 358 புள்ளிகளை அன்பு இல்லமும், 371 புள்ளிகளை காந்தி இல்லமும், 859 புள்ளிகளை பாரதி இல்லமும், குருகுலம் 980 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைத் தட்டிக்கொண்டது.
இறுதிநிகழ்வாக இல்லக்கொடிகள் இறக்கப்பட்டு, தமிழர் வி.கழகம் 95 ன் கொடியும் இறக்கப்பட்டு தமிழீழக்கொடியும், பிரெஞ்சு தேசிக்கொடியும் இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் இல்ல விளையாட்டுப்போட்டி இரவு 21.00 மணிக்கு நிறைவுபெற்றது.
(ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் தமிழர் விளையாட்டுக்கழகம் 95 நடாத்திய இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி- 2019