முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

    0
    294

    முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் நடப்பட்டிருந்த விகாரையின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டதை எதிர்த்து நேற்று (16) பௌத்த துறவிகள், பெரும்பான்மை இனத்தவர்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது சர்ச்சைக்குரிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 பிக்குகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட பௌத்த மதத்தவர்கள் இணைந்தே நேற்று நண்பகல் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள இதற்கென கொழும்பு, அநுராதபுரம் மற்றும் வெலிஓயா பகுதிகளிலிருந்து மூன்று பேரூந்துகளில் பௌத்த துறவிகளும்

    பெரும்பான்மையின மக்களும் அழைத்து வரப்பட்டனர்.ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேவேளை குறித்த ஆலயத்தில் பௌத்த மற்றும் இந்து மதத்தவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் இவ் ஆலய விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோகணேசனும் நேரில் சென்று ஆராய்ந்திருந்ததுடன் பௌத்த துறவிகளுடனும் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருடனும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அனுமதியற்ற முறையில் நடப்பட்டிருந்த விகாரையின் பெயர்ப்பலகையை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அகற்றியிருந்தது.

    இவ்வாறான நிலையிலேயே பௌத்த மத துறவிகளால் இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here