கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று அமைதியான முறையில் கூட்டுத் திருப்பலியுடன் கொண்டாடப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்ட இத் திருவிழா திருப்பலி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் மன்னார் மாவட்ட ஆயர் பேரருட் திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர்கள், அருட் தந்தையர்களின் பங்கேற்புடன் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக இடம்பெற்றது. வெளிநாட்டுத் தூதுவர்கள் ராஜதந்திரிகள், அரிசயல் பிரமுகர்கள் என முக்கியஸதர்கள் பலரும் திருப்பலியில் பங்கேற்றனர்.
நேற்றுக் காலை 10மணிக்கு திருவிழா திருப்பலி ஆரம்பமானது. ஆயலத்தின் அண்டிய பிரதேசங்களிலில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுட்டிருந்தனர்.
திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ளவந்திருந்த மக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே ஆலரயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். எவ்வித பொதிகள் கைப்பைகளும் அனுமதிக்கப்படவில்லை.
வழமையாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருவிழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்படும். ஆலயம் அமைந்துள்ள பகுதிகள் மட்டுமன்றி அண்டிய பிரதேசங்கள் பெரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வான வேடிக்கைகள், அன்னதானம் பேண்ட் வாத்திய இசை, அணிவகுப்பு, திருச்சுரூப பவனி என களைகட்டியிருக்கும். இம்முறை அவ்வாறு எந்த ஆடம்பரமுமின்றி ஏதே ஒரு திருப்பலி பூசையுடன் மட்டும் திருவிழா கொண்டாடப்பட்டது.
இம் முறை எதுவித ஆடம்பரங்களுமின்றி காலை பத்து மணிக்கு ஆரம்பமாகி 12மணியுடன் திருவிழா நிறைவு பெற்றது. நேற்றைய தினத்திலிருந்து புனிதரின் ஆலயம் வழமைபோல் என்றும் புனித அந்தோனியார் பக்தர்கள் காலை 5.00மணிமுதல் இரவு 8.00மணி வரை ஆலயத்தை தரிசிக்க முடியுமென்றும் பேராயரால் நேற்று அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக பக்தர்கள் சிறு சோதனையொன்றுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் அறிவித்தார்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்காகவும் காயங்களுடன் இப்போது சிகிச்சை தினம் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் நாடு அமைதியிலும் சமாதானத்திலும் திளைக்க புனித அந்தோனியாரிடம் மன்றாடப்பட்டது.