இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி புறப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்லும் வழியில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தோவாலயத்தையும் பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்தித் ஆண்டகையையும் சந்தித்துத்து தனது கவலையையும் இரங்கலையும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் இந்தியப் பிரதமர் மோடி பிரவேசித்த வேளை மழை பெய்தமையினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை கறுப்புக் குடை பிடித்து வரவேற்பளித்து பாதுகாப்பாக செயலகத்திற்குள் அழைத்துச் சென்றார்.
இதன் பின்னர் அவருக்கு இராணுவ வேட்டுக்களுடன் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது, அதன் பின்னர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தமது வருகையை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தினுள் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்துள்ளார்.
இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30 ஆம் திகதி பதவி ஏற்றது.
2 ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மாலத்தீவுக்கு மேற்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து இலங்கைக்கு இன்று அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தனது மாலத்தீவு பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணம், அந்த நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, மோடி நேற்று மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு மாலத்தீவு அரசின் உயரிய விருதை அந்த நாட்டின் ஜனாதிபதி வழங்கினார். இதனை அடுத்து, மாலத்தீவு பயணம் நிறைவடைந்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.