இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக பிரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாண இ.போ.ச ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்டனர்.
ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்ட இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், பரஞ்சோதி ஆகியோரும் சென்று விபங்களைக் கேட்டறிந்தனர்.
எனினும் குறித்த விடயம் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமையினை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாணத்தில் இரண்டு பிரிவுகளாக போக்குவரத்துச் சபை இயங்க தாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு வார காலத்திற்குள் சாதகமான பதிலை வெளியிடுவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாண உறுப்பினர்களால் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவருடைய தனிப்பட்ட முடிவாகவே இந்தச் செயற்பாடு அமைந்துள்ளதாக போக்குவரத்து சபையினர் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.