யேமனிய தாயிஸ் நகரிலுள்ள கிளர்சியாளர்களை இலக்கு வைத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பு நாடுகளின் படையினர் மீண்டும் வான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.
யேமனிலான வான் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பு அறிவித்து சில மணி நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தாயிஸிலுள்ள ஜனாதிபதி மன்சூர் ஹாடிக்கு ஆதரவான இராணுவ பிரிவின் தளமொன்று கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதையடுத்தே இந்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஏடென் நகர், லஹ்ஜ் மாகாண தலைநகர் ஹுதா மற்றும் டாலெஹ் நகர் என்பவற்றில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்க ஆதரவுப் படையினருக்குமிடையே உக்கிர மோதல்கள் இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யேமனிலான தமது தாக்குதல்கள் தொடர்பான நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்நாட்டிலான தமது ஒரு மாத கால தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி தலைமையிலான கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
தேவைப்படும் பட்சத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என அச்சமயத்தில் அந்தக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் யேமன் தொடர்பில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவைப்பாடுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜென் பஸகி தெரிவித்தார்.
சவூதி தலைமையிலான கூட்டமைப்பின் தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரவும் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் கிளர்ச்சியாளர்கள் புதன்கிழமை அழைப்பு விடுத்திருந்தனர்.
யேமனில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து வான் தாக்குதல்களிலும் தரை வழி மோதல்களிலும் 944 பேர் பலியா கியுள்ளதுடன் 3,487 பேர் காயமடைந்துள் ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.