முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகம் சிங்கள பௌத்தர்களுடையதெனக் கோரி சிறிலங்கா மதவாதிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம், பௌத்த மதகுருமாராலும், வெளியிடங்களிலிருந்து வருகைதந்த சிங்கள வர்களாலும் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமகா விகாரை பகுதியிலே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த விகாரை அமைக்கப்பட்ட பகுதி சிங்கள பௌத்த மக்களுடையது எனத் தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட்டு குறித்த விகாரை அமைக்கப்பட்ட பகுதியை தமக்குப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துமீறி விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை செய்வதற்கும் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்ததோடு இரு தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் கட்டளையிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று வெளியிடங்களில் இருந்து வருகைதந்த பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருப்பது அங்கு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றதென தெரிவிக்கப்படுகிறது.