அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்ட மூலத்தை எதிர்வரும் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி மக்களையும் இணைத்துக்கொண்டு வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவி.பி ஜே. தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வழிவகுக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவது சிலருடைய சதி முயற்சிகளால் இழுபறிநிலையில் உள்ளது. இதற்கு எதிராக மக்களையும் இணைத்துக்கொண்டு வீதியில் இறங்கத் தீர்மானித்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் இவ்வாறு கூறினார்.
19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவது காலதாமதமாவதை எதிர்த்து இன்று பிற்பகல் 4 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறும் வகையில் ஜனாதிபதியும், புதிய அரசாங்கமும் செயற்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும், இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தலின் போது மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டது.
இருந்தபோதும் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்துள்ள போதும் வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. கடந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாது தான் தலைமை வகிக்கும் கட்சியில் உள்ளவர்கள், குறிப்பாக கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினரின் குரல்களையே ஜனாதிபதி செவிமடுப்பதாகவும் அநுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டினார். எனவே மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் இனியும் பேச்சுவார்த்தைகள் நடத்தி நடைமுறைபடுத்த முடியாது என தீர்மானித்திருப்பதால், அவற்றுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
எதிர்வரும் 27ஆம் திகதி 19ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 28ஆம் திகதி அது நிறைவேற்றப் படாவிட்டால், அதற்குப் பின்னர் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே. எனவே மேலும் இதனைத் தாமதப்படுத்தாமல் ஏற்கனவே தீர்மானித்தபடி 19ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற் றப்பட வேண்டும்.
27ஆம் திகதிக்கு முன்னர் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவது சாத்தியமற்றது. 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதாயின் எதிர்வரும் மே மாதம் இறுதிப் பகுதியிலேயே அது சாத்தியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
19வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப் படுவதை தடுப்பதற்கு திரைமறைவில் சதி மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சரவை அங்கீகாரத்தை நீதிமன்றத்தின் அனுமதி யையும் பெற்று 19 வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப் பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு சிலர் தடையாக இருக்கின்றனர். இந்த சதிகளைத் தோற்கடிக்கவேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.