அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக தங்கள் பெறுமதியான வாக்குகளை அளிக்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுதும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் ஆகியோரிடம் மிகவும் கௌரவமான முறையில் கோரிக்கை விடுக்கின்றேன். இது எமக்கு கிடைத்த வரலாற்று ரீதியான ஒரு சந்தர்ப்பம், எனவே 19 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் வரலாற்று ரீதியான கௌரவத்தை அது உங்களுக்கு வழங்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனநாயகம், சிறந்த சமூகம் உள்ளிட்ட நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் 19 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றேன். இதற்காக உங்களின் பெறுமதியான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த பங்காளியாகுங்கள். தேர்தல் முறை மாற்ற யோசனையையும் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் அதனை பாராளுமன்றத்தில் நிறை
வேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் மக்களின் ஜனநாயக உரிமையையும் ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளோம். நான் இன்றுவரை ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பைக் கூட விடுக்கவில்லை. யாருடனும் பேசவில்லை. நீதிமன்றத்தில் நான் எவரையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்ததில்லை. தொலைபேசியில் உரையாடியதில்லை.
இதுதான் நல்லாட்சிக்கான தேவை என்றும் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்துள்ளதையடுத்து நேற்று இலத்திரனியல் ஊடகங்களூடாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-
100 நாள் வேலைத்திட்டத்தில் பொருளாதாரம், அரசியல், அபிவிருத்தி, சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல விடயங்களை புதிய நடவடிக்கைகளில் கால்பதித்துள்ளோம். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மக்கள் வாக்களித்ததன் மூலம் ஜனநாயக உரிமையின் பரிபாணத்தையும், புரட்சியையும் உருவாக்கினர்.
100 நாள் திட்டம்
அதன் பின்னர் இந்த நாட்டின் கடந்த மூன்று மாதகாலமாக சிலரின் செயற்பாடுகள் அரசியல் தீர்மானங்கள், என்பன புரட்சிகள் நடந்த பின்னர் உலக நாடுகளில் இடம் பெறும் நிலைமையை எனக்கு நினைவுபடுத்துகிறது. இந்த 100 நாள் திட்டத்தில் என்ன செய்தீர்கள் என்று சிலர் கேட்கின்றனர். 100 நாட்களில் பல விடயங்களை செய்துள்ளோம். ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நான் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்த போது நாட்டின் சர்வதேச உறவுகள் எவ்வாறு இருந்தன என்று உங்களுக்குத் தெரியும். எமது செயற்பாடுகளினால் சர்வதேசம் இரண்டாகப் பிரிந்தது. ஐக்கியநாடுகள் சபையின் பேரவை, பாதுகாப்பு சபை பேரவை என்பவற்றில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் 9 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமை மாறியது.
உலகம் எம்மை நம்பியது
நாட்டின் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் அடிப்படை உரிமையையும் அரச தலைவர் பாதுகாப்பார் என்று சர்வதேசம் என் மீது நம்பிக்கை வைத்தது. கடந்த சில மாதங்களில் நான் சில நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டேன். முதலாவதாக அயல் நாடான இந்தியாவிற்கு விஜயம் செய்தேன். அதன் பின்னர் பிரிட்டனுக்கு சென்றேன். பிரிட்டனில் அந்நாட்டின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு செயலாளர், வெ ளிவிவகார செயலர், மகாராணியார், ஆகியோரை சந்தித்தேன். இதன் மூலம் ஐரோப்பாவை வெற்றி கொண்டோம்.
உலகத்தை நாம் வென்றோம்
அதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு சீனாவுடன் எமது உறவு மேலும் வலுவடைவதற்கு காரணமாக அமைந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டேன். அதன்படி இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ததன் மூலம் முழு உலகத்தையும் வெற்றிகொண்டுள்ளோம். இந்திய பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப், சீன ஜனாதிபதி சி.ஜின்பின் ஆகியோர் எமக்கு காட்டிய அன்பும், நட்பும் மிகவும் ஆழமானது.
மேலும் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஐ.நா. செயலாளர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி அவரின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. ஆசியாவின் பல நாடுகளில் வெ ளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதன்படி கடந்த ஆட்சியில் வீழ்ச்சியடைந்திருந்த சர்வதேச உறவு நம்பிக்கை, என்பன கடந்த 100 நாட்களில் மீண்டும் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன.
தொலைபேசி உரையாடல் பதிவு
நீங்கள் ஏன் என்னை ஆட்சியில் அமர்த்தினீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூட தொலைபேசியில் உரையாடினால் அந்த உரையாடல் பதிவு செய்யப்படும் என்ற அச்சம் இருந்தது. சாதாரண மக்களுக்கும் அந்த அச்சம் இருந்தது. முப்படையினர், பொலிஸார் தொலைபேசியில் உரையாட அச்சமடைந்தனர். ஆனால் கடந்த மூன்று மாத காலத்தில் அந்த சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஊடக சுதந்திரத்தைக் குறிப்பிடவேண்டும். ஜனவரி 8 ஆம்திகதிக்கு முன்னர் ஊடக நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்களுக்கு, பணிப்பாளர்களுக்கு அரசியல் அதிகாரிகள் எவ்வாறு பேசினர் என்று அனைவருக்கும் தெரியும்.
அச்சுறுத்தல் அழுத்தம்
அவற்றில் அச்சுறுத்தல், அழுத்தம் என்பன இருந்தன. ஆனால் இன்று அனைத்திற்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் சில ஊடகங்கள் செயற்படும் விதத்தைக் கண்டு ஆச்சரியமடைகின்றேன். கிடைக்கப் பெற்றுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். நாங்கள் மக்களின் ஜனநாயக உரிமையையும் ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், எவ்வாறு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். நீதிமன்றம், ஊழல் எதிர்ப்பு ஆனைக்குழு, உயர் நீதிமன்றம் என்றபன தொலைபேசி அழைப்புக்கு அடிபணிந்திருந்தன.
சுதந்திரமாக செயற்பட்டனர்
குற்றங்களுடன் தொடர்பு பட்டவர்கள் அக்காலத்தில் சுதந்திரமாக செயற்பட்டமை உங்களுக்குத் தெரியும். சட்டமா அதிபருக்குக் கூட தனது கடமையை செய்ய சுதந்திரம் இருக்கவில்லை. என்னுடைய அதிகாரத்தின் கீழ் பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டமை, இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை என்பவை தொடர்பில் தெ ளிவு உள்ளது. சிரேஷ்டத்துவம், தகுதி, என்பவற்றைப் பார்த்து நான் நியமனங்கள் வழங்கியுள்ளேன்.
எனவே நாம் சட்டத்தின் ஆட்சிப்படுத்தலை பலப்படுத்தியுள்ளோம். சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இது மிகவும் முக்கியம். தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளேன்.
புதிய வடிவம்
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எனக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்று நான் பாதுகாப்பு பேரவைக்கு ஆலோசனை வழங்கினேன். தற்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாம் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது. இது பிரவேசம் மட்டுமேயாகும்.
பலமான தலைவர் இல்லையாம்
நான் பலமான தலைவர் அல்ல என்று சிலர் கூறுகின்றனர். நான் தலைவர் இல்லை என்றும், பலவீனமானவர் என்றும் சிலர் கூறுகின்றனர். அதற்குக் காரணம் இந்த 100நாட்களில் நான் எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. காரணம் இந்த அதிகாரங்களை நீக்குவதற்கே நீங்கள் என்னை தெரிவு செய்தீர்கள், அதற்காகவே நான் வந்தேன். அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற வரையறையற்ற அதிகாரங்களை நீக்கவே நான் வந்தேன். இவைத் தொடர்பில் பல வரைவிலக்கணங்கள் உள்ளன. எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டடிலிருந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்பு வெ ளியிட்டு வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து வேட்பாளர்களும் பாராளுமன்ற முறையை நீக்குவதாக கூறினர். ஆனாலும், ஆனால் அதனை செய்ய முடியவில்லை. அதேபோன்று 78 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்ட விருப்பு வாக்கு தேர்தல் முறைமைக்கு சுதந்திரக்கட்சி எதிர்ப்பு வெ ளியிட்டு வந்துள்ளது. முற்போக்கு அரசியல் கட்சிகள் இந்த இரண்டு விடயங்களையும் எதிர்க்கின்றன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கியதேசிய கட்சியும் இதனை எதிர்க்கின்றது.
இது பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு விவாதமாகும். அதனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இந்த நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம், சிறந்த சமூகம், சர்வாதிகாரிகள் உருவாவதை தடுத்தல், அரசாங்க அதிகாரம், அரச சொத்துக்கள், நீதிமன்றம் என்பவற்றை தனியொருவரின் கீழ் கொண்டுவருவதல் என்பவற்றை உடனடியாக மாற்றியமைக்கவேண்டும்.
யாரும் இல்லை
உலகின் எந்த தலைவரும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க இந்த அளவுத் தூரம் நெகிழ்வு தன்மையுடன் இருப்பார் என்று நான் கேள்விப்பட்டதில்லை. என்னைப் பற்றி நான் பேசவில்லை. சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு சென்று எனது ஆலோசனையின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரங்களை நீக்கவுள்ளதாகவே கூறினார். எனது தனிப்பட்ட அரசியலமைப்பு ஆலோசகர்களும் உயர்நீதிமன்றத்திற்கு சென்று இதனைக்கூறினர். இது தொடர்பில் நாம் அரசியல் தீர்மானங்களை எடுத்தோம். உயர் நீதிமன்றமும் தீர்மானம் ஒன்றை வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாம் செயற்பட்டு வருகின்றோம். அதனை தாண்டி நாம் செல்ல முடியாது.
ஆதரவு தாருங்கள்
பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தன் பின்னர் கடந்த சில தினங்களில் சில தடைகள் காணப்பட்டதை நாம் கண்டோம். இந்நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுதும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், ஆகியோரிடம் மிகவும் கௌரவமான ஒரு கோரிக்கையை நான் விடுக்கின்றேன். இது எமக்கு கிடைத்த வரலாற்று ரீதியான ஒரு சந்தர்ப்பம், எனவே 19 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் வரலாற்று ரீதியான கௌரவத்தை உங்களுக்கு வழங்கும், ஜனநாயகம், சிறந்த சமூகம் உள்ளிட்ட நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் 19 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றேன். இதற்காக உங்களின் பெறுமதியான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தேர்தல் முறை மாற்றம்
நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த பங்காளியாகுங்கள். தேர்தல் முறை மாற்ற யோசனையையும் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம். விரைவில் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதுமட்டுமன்றி ஊழல் மோசடிக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளன. இனங்களுக்கிடையில் சகவாழ்வையும் ஒற்றைமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் சிங்கள, தமிழ், முஸ்லிம், .மலே, பேகர், ஆகிய மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தை உருவாக்கி நம்பிக்கையின்மையையும் சந்தேகத்தையும் போக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
விசேட செயலணி
எமது நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் வரலாற்று ரீதியான அடிப்படையுடன் ஏனைய அனைத்து இன மக்களுடனும் சகோதரத்துவடனும் நட்புடனும் சகவாழ்வுடனும் நீதியான சமூக கட்டமைப்பிற்குள் சந்தேகமின்றி வாழும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக நாங்கள் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்கினோம். இதன் மூலம் இனங்களுக்கிடையில் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த ஜனாதிபதி செயலணி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
தேசிய ஒற்றுமை
நாங்கள் அதனுடன் மட்டும் நின்று விடாமல் தேசிய ஒற்றுமைக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் செயலகத்தையும் ஆரம்பித்துள்ளோம். நாட்டில் காணப்படுகின்ற உள் பிரச்சினைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் 30 வருடங்கள் யுத்தம் இருந்த நிலையில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது. இதற்காக அனைத்து இன மக்கள் மத்தியிலும் நட்புறவு உருவாக்க வேண்டும்.
பொய் பிரசாரம்
ஆனால் சிலர் இணையத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பிரசாரம் செய்கின்றனர். வடக்கில் இராணுவத்தைக் குறைத்துவிட்டதாகவும் சம்பூரில் புலிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள மக்களைவிட சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளதாகவும் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறான பிரசாரங்களை உலகத்துக்கு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுகின்றோம். வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை ஏமாற்றுகின்றனர். யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புப் படையினர் வடக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் தனியார் காணிகளை பயன்படுத்தினர். அவற்றை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தவறா என்று கேள்வியெப்புகின்றேன்?
தவறாகுமா?
பாதுகாப்புப் படையினருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாதவாறும் தேசியப் பாதுகாப்புக்கு சிக்கல் இல்லாத வகையிலும் பாதுகாப்பு முகாம்கள் பலவீனமாகாத வகையிலும் கொழும்பு ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையைச் சுற்றியுள்ள தனியார் சொத்துக்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தவறானதா? இவை தொடர்பில் தவறான பிரசாரங்களைச் செய்கின்றனர். அரச சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் காணப்படுகின்றன வைப்புக்களில் உள்ள இந்நாட்டு நிதியை மீண்டும் கொண்டுவருவதற்காக விசேட ஜனாதிபதி செயலணியை உருவாக்கியுள்ளோம். தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதற்கான உதவியைப் பெறவுள்ளோம். இந்த அனைத்து விடயங்களிலும் தெளிவாக இருக்க வேண்டும். நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதைப் போன்று நல்லாட்சியை ஏற்படுத்த எம்மை அர்ப்பணிப்போம். ஆனால் நல்லாட்சியில் கிடைக்கின்ற சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் தவறாகப் பயன்படுத்தாமல் நாளை பிறக்கின்ற பிள்ளைகளுக்காக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நோக்கிப் பொறுப்புடன் செயற்படுங்கள். ஊழல் மோசடியை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வோம். நான் இன்றுவரை ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பைக் கூட விடுக்கவில்லை. யாருடனும் பேசவில்லை. நீதிமன்றத்தில் நான் எவரையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்தில்லை. தொலைபேசியில் உரையாடியதில்லை. இதுதான் நல்லாட்சிக்கான தேவை. நான் பதவிக்கு வரும்போது ஜனாதிபதி செயலகத்தில் 1575 பேர் சேவையில் இருந்தனர். அதனை நான் 600 பேராகக் குறைத்துள்ளேன். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அதேபோல் ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயத்துக்கு இடமளிக்க மாட்டோம். ஆனால் ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டவுடன் சிலர் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் நான் மக்களை நம்புகின்றேன். மக்கள் சரியானதைத் தெரிவு செய்வார்கள். நாட்டின் சட்டம் பலவீனப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தீர்மானம் எடுக்க வேண்டிய இடத்தில் நான் தீர்மானம் எடுப்பேன். உயிர்தியாகத்துடனேயே நான் தேர்தலுக்கு முகம்கொடுத்தேன். என்னுடையதும் என்னுடைய பிள்ளைகளுடனதும் உயிர்களுடன் நான் கடலில் பாய்ந்தேன். இன்றும் அந்த நிலையிலேயே நான் இருக்கின்றேன். புதிதாகச் சிந்திப்போம், புதிய விடயங்களை மேற்கொள்வோம். அனைத்து விடயங்களிலும் எமது பொறுப்பையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.