கோத்தாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி: விசாரணை ஆரம்பம்!

0
111
flag-3கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட இலங்கையின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கைகளிலும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கைகளிலும், இலங்கையின் தேசியக் கொடியை ஒத்த சிங்கக்கொடிகள் காணப்பட்டன.
இலங்கையின் தேசியக்கொடியில், தமிழ், முஸ்லிம் இனங்களை அடையாளப்படுத்தும், செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறப் பகுதிகள் நீக்கப்பட்டு அந்தக் கொடிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் தேசியக்கொடியின் வடிவமைப்பின் மாற்றம் செய்வது குற்றமாகும்.இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.அந்த தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது குறித்தும் நீதிமன்றத்துக்கு காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here