பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி எப்போதும் தமிழர்கள் மற்றும் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுபவர் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, மேகதாது என்ற பகுதியில் அணை கட்டி நீரை தேக்க முயல்கிறது.
இதை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதை எதிர்த்து, கர்நாடக அமைப்புகள் ஒன்றிணைந்து, கடந்த சனிக்கிழமை தங்கள் மாநிலத்தில் முழு அடைப்பு நடத்தினர். இதனிடையே, நிருபர்களுக்கு பேட்டியளித்த பாஜகவிலுள்ள சுப்பிரமணியன் சுவாமி, மதராஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக கர்நாடகம் இருந்தபோது, நம்மால் வஞ்சிக்கப்பட்டது.
எனவே, தொடர்ந்து, அந்த மாநிலத்தை நாம் நசுக்க வேண்டாம். இஸ்ரேல் பாணியில், கடல் நீரை குடிநீராக்க தமிழக அரசு முயல வேண்டும் என்று கூறியிருந்தார். சு.சுவாமியின் இந்த பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சுப்பிரமணியன் சுவாமியின் மேகதாது அணை குறித்த பேட்டி முற்றிலும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரானது.
உண்மை நிலை புரியாமல் சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார். இலங்கை தமிழர் விஷயத்திலும் கூட சு.சுவாமி தமிழர் நலனுக்கு எதிராகவே நடந்து கொண்டார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த குழப்ப நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.