இன்று (22ஆம் திகதி) புதன்கிழமை முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரை விடுவித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என அறிக்கை ஒன்றினூடாக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், மாணவர்களின் நலன்சார் விடயங்களில் பல்கலைக்கழக நிர்வாகம் தலையீடு செய்து உடன் தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை செயற்படுத்தும் வரை வகுப்புப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ள வகுப்புப் பகிஷ்கரிப்புக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின் பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கி முழுமையான போராட்டம் நடாத்தப்படும் எனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.