வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சமூக ஏற்றத்தாழ்வைக் காரணம் காட்டி கடந்த வருடம் ஜே.சி.பி கனரக இயந்திரத்தினால் தேர் இழுத்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திய ஆலய நிர்வாகம் இந்த வருடம் வருடாந்த திருவிழாவை நிறுத்திய செயல் கடும் கண்டனத்திற்கு உரியது.
அப்பழுக்கற்ற தமிழின விடுதலைக்காக முப்பது ஆண்டுகள் போரிட்டு, நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளையும் இலட்சக்கணக்கான பொது மக்களையும் இழந்த தேசத்தில் இப்படியான சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியிருப்பது வேதனையானது.
குறித்த ஆலய நிர்வாகத்தில் இருந்து இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் மிகக் கேவலமான, அடிமட்ட சிந்தனை உடையவர்கள். மனிதர்களாக மதிக்கப்படக்கூடாதவர்கள். இத்தனை விலை கொடுத்த பின்னரும் தமிழினம் விடுதலை அடையாமல் இருப்பதற்கு இப்படியானவர்களே காரணம்.
எனவே, இந்த விடயத்தில் நாட்டில் உள்ள அனைத்து சைவத் தமிழ் அமைப்புக்களும் ஆன்மீக, அறநெறிச் செயற்பாட்டாளர்களும் அதீத அக்கறை எடுக்கவேண்டும்.
அத்துடன், தென்மராட்சி பிரதேச செயலகம் இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஆலய திருவிழாவை நிறுத்த முன்னின்று செயற்பட்ட கீழ்த்தரமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
இந்த விடயத்தில் வன்முறைப் போக்கை கடைப்பிடிக்காமல், ஜனநாயக வழியில் போராடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்துகின்றோம் என பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.