கொக்கிளாய் எல்லையில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி.. ரவிகரனுடன் சென்ற மக்கள் தடுத்து நிறுத்தினர். கொக்கிளாயில் பதற்றம்.
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் ,தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர்.
சம்பவ இடத்தில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கூடியதால் அப்பகுதியில் ஒரு முறுகல் நிலை தோன்றியது.
இது பற்றி மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும் ,தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர்.
ஏற்கனவே குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிற நிலையில் ,சட்ட விரோதமான முறையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தகவலை அறிந்தவுடன் முன்கூட்டியே அவ்விடத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் நில அளவை செய்யும் முயற்சியை அனுமதிக்கவில்லை.
முதலில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நில அளவையாளரிடம், ரவிகரன் அவர்கள் சூழ்நிலை பற்றி தெளிவாக எடுத்துக்கூறினார்.
சட்டவிரோதமான இச்செயலை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு நில அளவையாளர் சூழ்நிலை பற்றி விளக்கினார்.ஆனால் அவர் நில அளவையை மேற்கொள்ளுமாறு மீண்டும் கூறியதாக நில அளவையாளர் ரவிகரனிடமும் மக்களிடம் தெரிவித்தார்.
உடனே ரவிகரன் “இது ஒரு சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான நடவடிக்கை. ஏற்கனவே தமிழ் மக்களின் பெயரில் இருக்கிற காணிகளை, இவ்வாறு அதிகாரபூர்வமாக அபகரிக்கமுனைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீங்கள் நில அளவை செய்வதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.நீங்கள் உங்கள் முயற்சியைக் கைவிடும் வரை இவ்விடத்தை விட்டு நாங்கள் நகரமாட்டோம் என்று நேரடியாக கூறிவிட்டார்.
பின்னர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரவிகரன் நிலவரத்தை நேரடியாக அழுத்தமாகத் தெரிவித்தார்.
இவ்வாறிருக்க , தமிழ் மக்களின் காணிகளை தங்களின் காணி என்று கூறிக்கொண்டு பல சிங்கள மக்களும் அவ்விடத்தில் கூடிவிட்டனர். அதேவேளை தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தரும் அங்கே வந்தடைந்தார். ஒரு கட்டத்தில் சிங்கள மக்கள் அந்தக் காணிகள் தங்களுடையது என்று கூற,தமிழ் மக்களும் ரவிகரனும் காணி ஆவணங்களை முன்னிறுத்தி அங்கிருந்தோர் முன்னிலையில் வாதாட ஒரு முறுகல் நிலை அங்கே தோன்றியது. எனினும் தங்கள் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக ரவிகரனும் மக்களும் இருந்த நிலையில் , நில அளவையாளர்களும்,தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தரும் தங்கள் முயற்சியைக் கைவிட்டுச் சென்றனர்.
இன்று முற்பகல் நிகழ்ந்த இச்சம்பவத்தால் கொக்கிளாய் பகுதியில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.