ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற பிரேரணையினை சபையில் எடுத்துக் கொள்ள அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் சபையில் நேற்று பதற்றம் நிலவியது.
இதனால் மாகாண சபைக்குள்ளும் வெளியேயும் ஆளுங்கட்சிக்குள் கடும் வாக்குவாதம் நிலவிய தோடு சில உறுப்பினர்கள் மோதிக் கொள்ளவும் எத்தனித்தனர்.
வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை அவைத்தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் தலைமையில் நடை பெற்றது.
இவ் அமர்வில் இலங்கையில் நடைபெற்றது இனப்படு கொலையே. அதனை மாகாண சபை நம்புகின்றது.
தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படல் வேண் எனக்கோரும் பிரேரணையினை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன் மொழிந்தார்.
பிரேரணை முன்மொழியப்பட்டதும் அதனை நிறைவேற்றுவதா இல்லையா என அவைத் தலைவர் சுயமாக முடிவெடுக்காமல் அதனை சபைக்கு விட்டார்.
இதன்போது எழுந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இப்பிரேரணையினை தற்போது நிறைவேற்றுவது பொருத்தப்பாடுடையதல்ல எனவும் இப் பிரேரணை முழு மைப்படுத்தப்பட்டு ஆதாரபூர்வமாக நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து எழுந்த சிவாஜிலிங்கம், 6 மாதங்களுக்கு முன்பே இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதுவரை அது தொடர்பில் மாகாண சபை எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.
மகிந்த ராஜபக் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் புலிகளை வைத்து அரசியல் நடத்துகிறார்.
எதிரணி இனப்பிரச்சினை தொடர்பில் ஒன்றும் பேசாமல் இருந்து வருகிறது.இவ்வாறு இலங்கையில் தொடர்ந்தும் இனப்பிரச்சினை குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவருகிறது.
சிவாஜிலிங்கத்தின் விளக்கத்தினையடுத்து எழுந்த உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், இங்கு இனஅழிப்பு நடைபெற்றது என வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுவதால் இலங்கை மீதான சர்வதேச விசாரணையினை எவ்விதத்திலும் பாதிக்காது என சர்வதேச அரசியல் உதாரணங்களுடன் நீண்ட விளக்கத்தினை அளித்தார்.
உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறுவதை முழுமையாக நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால்; இது பிரச்சினையல்ல.உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் ஆதாரபூர்வமான தகவல்கள் உள்வாங்கப்பட்டு பிரேரணை ஆழம்மிக்கதாக மாற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.
முதலமைச்சரின் உரையினைக் கேட்ட உறுப்பினர் சித்தார்த்தன், ஆரம்ப காலத்தில் இருந்தே இங்கு இடம்பெற்றது இன அழிப்புத் தான் என எமது தலைவர்கள் தொடர்ச்சி யாக கூறிவருகின்றனர் என்றார்.
இதனையடுத்து மீண்டும் எழுந்த முதலமைச்சர்,இப் பிரேரணையினை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றினால் அதனை மகிந்த அரசு சாதகமாகப் பயன்படுத்துகின்ற வாய்ப்புண்டு எனவும் ஆகையினால், அடுத்த அமர்வில் மீண்டும் இப் பிரேரணையினை முழுமைப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
இப் பிரேணை அரசியல் யாப்பிற்கு முரணாகவுள்ளது எனவும் விரிவாக ஆராயப்படல் வேண்டுமெனவும் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.
இறுதியாக இப்பிரேரணை தொடர்பில் இறுதி முடிவொன்றும் எடுக்கப்படாமல் சபையினை அவைத் தலைவர் ஒத்திவைக்க முயன்றார்.
இதன்போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் பிரேரணை எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என அவைத் தலைவரிடம் கோரினார்.
ஜனவரி மாதம் எடுத்துக் கொள்ளப்படும் என அவைத் தலைவர் சிவஞானம் கூற, அதற்கு முன் இம் மாதம் 11ஆம் திகதி நடை பெறவுள்ள அமர்வில் எடுத்துக் கொள்ள முடியாதா?என சிவாஜிலிங்கம் கோர, முடியாது எனக் கூறிவிட்டு திடீரென அவையினை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கையினை விட்டு கீழிறங்கி வந்தார்.
இதனால் ஆவேசமடைந்த சிவாஜிலிங்கம் செங்கோலை கீழே எறிந்து உடைத்தார்.
எதிர்க் கட்சியினர் உட்பட ஆளுங் கட்சியின் பெரும்பாலானோர் குறித்த பிரேரணையினை வாக்களிப்புக்கு விடுமாறு கோரியபோதிலும் அவைத் தலைவர் அதற்கு அனுமதி மறுத்தமையினால் இது உறுப்பினர் ஒருவரின் சிறப்பு நிலையினை மீறும் செயல் என குற்றம் சாட்டியிருந்தனர்.