பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

0
1647

 மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் சென்றடைந்தது. அங்கு முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் ​- தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றது . அங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுச் சுடரினை அமெரிக்காவில் இருந்து வருகைதந்த அமெரிக்க உலகத்தமிழர் அமைப்புத் தலைவர் திரு.தணிகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை 16.032009 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் திருமறவன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்தார். நினைவுச் சுடரினை 15.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தாயையும் சகோதரியையும் இழந்த தாசன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர் வணக்கத்தை 16.032009 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் திருமறவன் அவர்களின் துணைவியாரும் பிள்ளைகளும் செலுத்திவைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. வணக்க நடனத்தை திறான்சி தமிழ்ச்சோலை மாணவிகள் உணர்வுபொங்க வழங்கியிருந்தனர். இம்முறையும் பேரணியில் குர்திஸ்தான் விடுதலை இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர். பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ் மற்றும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் அமெரிக்க உலகத்தமிழர் அமைப்புத் தலைவர் திரு.தணிகுமார் அவர்களின் சிறப்புரை, சென் சென்தனி நாடாளுமன்ற உறுப்பினர் M. Jean-Christophe Lagarde அவர்களின் உரை, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் அவர்களின் பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நவநீதன் நிந்துலன் அவர்களின் பிரெஞ்சுமொழியிலான உரை, குர்திஸ்டன் மக்களின் பிரதிநிதியின் பிரெஞ்சு மொழியிலான உரை, பிரெஞ்சு தேசிய விடுதலை அமைப்பின் சார்பில் பிரெஞ்சுப் பிரமுகர்களின் உரை, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சார்பில் திரு.சுந்தரவேல் அவர்களின் உரை, பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த நா.க.அரசின் சார்பில் திரு.மணிவண்ணன் அவர்களின் உரை, முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை நின்று மருத்துவப்பணியாற்றிய மருத்துவர் திரு.நா.வண்ணன் அவர்களின் உரை எனப்பல உரைகள் இடம் பெற்றதுடன் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் அறிக்கைகளும் வாசித்தளிக்கப்பட்டன. அரங்க நிகழ்வுகளாக தொர்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி சுதாகரன் டிலுசியா அவர்களின் கவிதை, செவ்ரோன் தமிழ்ச் சோலை மாணவிகளின் பிரெஞ்சு மொழியிலான நடிப்பும் கதையும், கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவி செல்வி ரவிச்சந்திரன் தயாழினி அவர்களின் உரை, சுவாசிலே றூவா தமிழ்ச்சோலை மாணவிகளின் எழுச்சி நடனம், வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனம், ஒல்னே சுபுவா தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் சிறப்பு நாடகம், கலைஞர்களின் பறையிசைப் பாடல்கள் எனப் பல நிகழ்வுகள் அரங்கைச் சிறப்பித்திருந்தன. இந்தப் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்த நிகழ்வில் வராறுகாணாத மக்கள் பெரும் அலையெனத் திரண்டு வந்த தமது உயிரிழந்த எம் உறவுகளுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தியதுடன், பலரும் இறுதிவரை நின்று நிகழ்விற்கு தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லாச்சப்பல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். லாச்சப்பல் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு எமது மக்களின் இனவழிப்பை பறைசாற்றிநின்றன. செயற்பாட்டாளர் கஜன் அவர்களின் இனவழிப்பு சாட்சி புகைப்படங்களும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் பிரமாண்டமாகாக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் உணர்வோடு ஒலித்த போது அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி நின்றனர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரம் முழங்க நிகழ்வு நிறைவடைந்தது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here