- முள்ளிவாய்க்கால் மண்ணில்
அணிதிரள்கின்றது தமிழினம்
தமிழர்களின் வாழ்வில் இரந்தம் தோய்ந்த சரித்திரம் எழுதப்பட்ட நாள் இன்று. மனிதாபிமானத்துக்கான போர் என்று சர்வதேச நாடுகளுக்கு பகிரங்க அறைகூவல் விடுத்து, வன்னியில் தமிழினத்தை மஹிந்த அரசு
மனிதாபிமானமின்றிக் கொன்றொழித்த கொடுந்துயர் நாள் இன்று. முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக அஞ்சலிக்க ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று அணிதிரளவுள்ளது.
வடக்கு – கிழக்கு தாயக தேசம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மூழ்கிச் சங்கமிக்கவுள்ளது. சாவுகள் நடந்தேறிய, கொடுந்துயர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
காலை 10.30 மணிக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்களை ஒன்றுகூடுமாறு நினைவேந்தல் குழு கேட்டுக் கொண்டுள்ளது. தாயக நேரம் சரியாக முற்பகல் 11 மணிக்கு ஈகச்சுடரேற்றல் நடைபெறும். அதேகணத்தில் ஈழ தேசம் எங்கும் 2 நிமிட நேரம் அகவணக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. தமிழர் தாயகத்தில் மதியம் வரையில் சகல விதமான வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளன.
சாவுகளைக் கண்டு ஈழத் தமிழினம் துவந்து விடவில்லை என்பதையும், அவற்றிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கின்றோம் என்பதையும், முள்ளிவாய்க்கால் நிலப் பரப்பில் பறித்தெடுக்கப்பட்ட உயிர்களின் சாவுகளுக்கு நீதி தேடிய பயணத்தில் ஆக்ரோஷமாகப் போராட வேண்டியிருக்கின்றோம் என்பதையும் முள்ளிவாய்க்கால் மண்ணில் பேரெழுச்சியாக இன்று ஒன்றுகூடும் தமிழினம் பறைசாற்றவுள்ளது.
“கொல்லப்பட்ட உயிர்கள் எமக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், அந்த உயிர்களைக் கொன்றெடுத்தவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்தத் தண்டனைகள், எதிர்காலத்தில் இவ்வாறானதொரு மனிதப் பேரவலம் நிகழாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
நீதி தேடிய இந்த நெடிய இடரிய பயணத்தில் ஒவ்வொரு தமிழனும் பங்கெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எமது உறவுகளுக்காக எமக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்காக இந்தப் பேரவலத்தின் பின்னரும் எஞ்சியிருக்கும் நாம்தான் நீதி தேட வேண்டும்.
நீதிக்கான பயணத்தின் ஓர் அங்கமாக, நினைவேந்தல் நிகழ்வில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். எமது தார்மீகக் கடமையைப் பிறர் மீது சுமத்துவதை விடுத்து சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிப்பதை விடுத்து, செவ்வனே நிறைவேற்ற ஒன்றுகூட வேண்டும். ஈழத் தமிழினம் தனது ஒன்றிணைந்த எழுச்சியை வெளிப்படுத்த முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவரும் அணிதிரள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது ஈழத் தமிழினம் இறுகப் பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றது. அந்தத் துயரவலிகள், நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை ஈழத் தமிழினம் உணர்கின்றது.
நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், மஹிந்த அரச படைகளினால் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணிதிரண்டு அஞ்சலிக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.