பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கார்ஜ் சார்சல் பகுதியில் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு தினமான இன்று 17.05.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 18.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சார்சல் மாநகர துணை நகர பிதா அன்னி பெறோனே அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுத் தேசியக்கொடியை பிரெஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பிரான்சுவா புப்பொனி அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக்கொடியை கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச் சுடரினை இரண்டு மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றது. லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக மலர்வணக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா புப்போனி அவர்கள், சார்சல் மாநகர துணை நகர பிதா அன்னி பெறோனே அவர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் மற்றும் சார்சல் மாநகர சபை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்ளஸ் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா புப்போனி அவர்கள், சார்சல் மாநகர துணை நகர பிதா அன்னி பெறோனே அவர்கள,; பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா ஆகியோர் உள்ளிட்ட பல செயற்பாட்டாளர்களின் நினைவுரைகளும் இடம்பெற்றன. கார்ஜ் சார்சல் தமிழ் சங்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்ச்சோலை மாணவர்களின் உதைபந்தாட்ட அணியான றோமியோ அணி பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா புப்போனி அவர்களுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். சிறப்பு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இறுதி வார நாட்களை நினைவு கூரும் முகமாக கலந்துகொண்ட அனைவருக்கும் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)