பிரான்சில் இயற்கையெய்திய பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை மக்கள் பிரதிநிதி ‘தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்” அம்மணி போலா லூயி வியோலெத் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பிரான்சில் உள்ள பெத்தின் கிராமத்தில் நேற்று 22.04.2015 புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாரிசில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெத்தின் கிராமத்திற்கு செல்வதற்கு லாச்சப்பல் பகுதியில் இருந்து விசேட பேருந்து போக்குவரத்துக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
காலை 9 மணியளவில் நிகழ்வில் கலந்துகொள்ளும் பொதுமக்களைத் தாங்கியவாறு விசேட பேருந்து புறப்பட்டுச்சென்றது.
பிற்பகல் 2 மணியளவில் புகழுடல், நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் தாங்கிவரப்பட்டு, அகவணக்கத்தோடு, இறுதி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்து, அன்னை போலா லூயி வியோலெத் அவர்களுக்கு ‘தமிழீழ விடுதலை இனப் பற்றாளர்” என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மதிப்பளிப்பு வழங்கியது.
மதிப்பளிப்புத் தொடர்பான அறிக்கையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் வாசித்தளித்தார்.
மதிப்பளிப்புத் தொடர்பான பிரெஞ்சு மொழி அறிக்கையை பிரான்சு தமிழீழ மக்கள்பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் வாசித்தளித்தார்.
அன்னை போலா தொடர்பான கவிதையை பொது மக்கள் சார்பில் திரு.பாணன் அவர்கள் வாசித்தளித்ததைத் தொடர்ந்து புகழுடலுக்கான தமிழீழத் தேசியக்கொடி போர்த்தும் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.பரமலிங்கம் அவர்கள், பிரான்சு மாவீரர் பணிமனை உறுப்பினர் திரு.பேபி சுப்பிரமணியம் அவர்களிடம் இருந்துபெற்று வழங்க, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் அன்னையின் புகழுடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து நினைவுரையை பிரான்சு மூதாளர் அவையைச் சார்ந்த திரு. கிருபை நடராசா அவர்கள் ஆற்றினார். பிரெஞ்சு மொழியிலான நினைவுரையை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பின் உறுப்பினரும் அன்னை போலாவின் நெருங்கிய நண்பருமான திருமதி நாகராஜா கமலினி அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்து புகழுடலில் போர்த்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.பரமலிங்கத்திடமிருந்து அன்னை போலாவின் குடும்பத்தினர் சார்பாக அவருடைய நெருங்கிய நண்பர் திருமதி நாகராஜா கமலினி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பின்னர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் தாங்கிவரப்பட்ட அன்னையின் புகழுடல், விதைகுழியில் வைக்கப்பட்டு அனைவராலும் மலர்வணக்கம், சுடர்வணக்கம் செய்யப்பட்டு, உறுதி மொழி எடுக்கப்பட்டது.
‘தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் உணர்வுபூர்வமாக அன்னை போலாவின் இறுதிவணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.
– பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஊடகப்பிரிவு.