முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஒன்றுகூடுமாறு சி.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை!

0
213

எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வித அரசியல் நோக்கங்களும் இல்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் நீதிக்காக குரல் கொடுப்பதற்கும் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுவதற்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சட்டம் சமமானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் வகையில், உச்சபட்ச அதிகாரம் கொண்ட சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதே இலங்கையில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய, மிக அமைதியான முறையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலை நடத்துவது அவசியமாகவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போல இம்முறையும் மாணவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரிமைகள் மற்றும் நீதி தொடர்பில் தமது உறுதியான நிலைப்பாட்டை வௌிப்படுத்துவது அவசியம் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here