முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணி யூ.ஆர்.த.சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சரை கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பி அறிக்கையை தயாரித்து வருவதாக தெரிவித்த அவர், நேற்று காலை நிதி மோசடி பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். நேற்று நிதி மோசடி பிரிவில் சுமார் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு சென்ற பசில் ராஜபக்ஷ, திவிநெகும வங்கிப் பணமோசடியில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு கடுவலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர,
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொள்ளுப்பிட்டியில் உள்ள பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் சாட்சியம் அளித்தார். இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டிருந்ததுடன் அவரை கைது செய்யுமாறு கடுவலை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதேவேளை, வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவிய லாளர்கள் மத்தியில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளுக்கும் முன்னுரிமை அளித்து விசாரணைக்கு தேவையான சகல ஆதரவினையும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
அவ்வாறே தனது குடும்பம் (ராஜபக்ஷ) 1932ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் எந்தவொரு ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.