என்னைப்போன்ற அப்பாவிகள் இனி பாதிக்கப்படக்கூடாது-அஜந்தன்!

0
333

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை பதில் நீதிவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு தாக்குதலை தாங்களே பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி திறந்த நீதிமன்றில் சமுகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பணித்தார்.
அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தன் தெரிவித்தார்.

தன்விடுதலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அஜந்தன் இனிவரும் காலங்களின் என்னைப்போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here